ஒகஸ்ட் 11
“நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” யோவான் 13:34
இயேசுவின் சிநேகத்தை எவ்வளவாய் ருசித்தாலும் அது போதாது. அது எவ்வளவோ இனிமை நிறைந்தது. நாம் அவரைத் தெரிந்து கொள்ளுமுன்பே அவர் நம்மை நேசித்தார். அவர் நம்மேல் அன்பாயிருந்தபடியால் தேவதூதர்களுடைய சுபாவத்தைத் தரித்துக் கொள்ளாமல், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டு நம்முடைய பாவங்களுக்கு பலியாக மரித்தால் தம் அன்பை காட்டுகிறார். நம்முடைய ஆத்தும சத்துருவை ஜெயித்தாலும், நமக்கு முன்னோடியாக பரமேறியதாலும், தம் அன்பை காட்டினார். பரிசுத்தாவியானவரை அனுப்பியதாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவராய் இருப்பதாலும் தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.
அவர் செய்து வருகிற ஒவ்வொன்றிலும் தமது அன்பைக் காட்டுகிறார். தேவனுக்குச் சத்துருக்களாக இருந்த நம்மைக் கண்டு, தமது பிள்ளைகளாக்கினார். பாவிகளாகிய நம்மைக் கண்டு மனதுருகுகிறார். ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாதுகாக்கிறார். தமது அன்பினால்தான் நாம் தவறு செய்யும்போது நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். அலைந்து திரிந்தாலும் திரும்பவும் நம்மை அவர்பக்கம் கொண்டு சேர்க்கிறார். அவர் அன்பாயிருப்பதினால் நம்மை இரட்சிக்கிறார். நமக்கு அவசியமான எல்லாவற்றிலும் நன்மையால் நிரப்புகிறார். அவர் மணவாளனாக திரும்பவும் வந்து நம்மை தம்மோடு சேர்த்துக்கொள்வதும் அவரின் பெரிய ஆழமான அன்பைக் குறிக்கும். பாவம் செய்பவர்களை விட்டுவிட்டு தம்முடைய பிள்ளைகளைத் தமது மகிமையில் நிரப்ப அழைத்து செல்வார். அவரின் சிங்காசனம்முன் நம்மை உயர்த்துவார். மகிமை நிறைந்த இரட்சகரே, உம்முடைய அன்பு அறிவுக்கு எட்டாதது.
கர்த்தாவே உமதன்பு
அளவில் எட்டாதது
அது கறையில்லா மகா
ஆழமான சமுத்திரம்.