முகப்பு துண்டு பிரதிகள் நிந்திக்கப்பட்டவரின் நிகரில்லா அன்பு

நிந்திக்கப்பட்டவரின் நிகரில்லா அன்பு

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் அமர்ந்துள்ளது மார்ஷிலெஸ் நகரம். – அழகான பூந்தோட்டங்களைக் கொண்டு பொலிவுற்றிருந்தது. ஆனால் வருடத்தின் எல்லா மாதங்களிலும் அவ்விதமாக இல்லாமல், பல மாதங்கள் வறட்சியால் பாதிக்கப்படும். ஏனெனில் உள்ளூரில் நீர் தேக்கிவைக்க போதுமான வசதியில்லாததால், 90 மைல் தூரத்திலுள்ள டியூரென்ஸ் நதியிலிருந்து, கால்வாய் மூலமாக இந்நகருக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கால்வாய் 1837-1848 காலகட்டத்தில் வெட்டப்பட்டதாகும்.

இந்த கால்வாய் வெட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, மார்ஷிலெஸ் நகரத்தில் கைஸான் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். தன் கடமைகளைச் சரிவரச் செய்வதில் இவர் தீவிர நாட்டமுடையவர். எந்த விதமான ஆடம்பரங்களையும் வெறுத்த கைஸான், மலிவான உணவை உண்டு காட்சியளிப்பார். எளிமையாகக் பணம் சேமித்து வைப்பதில் பெரும் ஆர்வமுடையவராக விளங்கிய இவர், அடிப்படையான தேவைகளைக்கூடத் தவிர்த்து, தனியே வாழ்ந்து வந்தார். மார்ஷிலெஸ் நகர மக்கள் இவரைக் கஞ்சன் என்று அழைத்தனர். எல்லாருடனும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் பழகியபோதிலும் நகர மக்கள் யாவரும் வெறுத்ததுடன், சிறுபிள்ளைகளும் கைஸானை நோக்கி “இதோ வயதான கஞ்சன் போகிறான்’ என்று கூக்குரலிடுவர். ஆனாலும் பண்பட்ட மனதுடையவரான இவர் முகம் கோணாமல், எதையும் தாங்கும் இதயமுடையவராக தன் கடமைகளைச் செய்வார்.

காலம் கடந்தது. கைஸான் நரை முடியுடன், கையில் கோலேந்தி தள்ளாடி நடமாட ஆரம்பித்தார். எண்பது வயது வரை தனியே வாழ்ந்த இவர் ஒருநாள் திடீரென மரணமடைந்தார்.

இவருடைய மரணத்திற்குப் பிறகுதான், தன் வாழ்நாள் முழுவதுமாக கைஸான் சேமித்து வைத்த பொன் வெள்ளியின் விலை பல லட்சம் என்பதை மார்ஷிலெஸ் நகர மக்கள் அறிந்துகொண்டனர். அவருடைய உயிலில் எழுதப்பட்டிருந்தது யாதெனில்,” ஒரு காலத்தில் நான் ஏழையாக இருந்தேன், நம் மார்ஷிலெஸ் நகர மக்கள் போதுமான தண்ணீர் வசதியின்றி கஷ்டப்படுவதைப் பார்த்ததும், ஏழைகளும் நல்ல குடிநீரை திருப்தியாகப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன், கால்வாய் ஒன்று வெட்ட, நான் என்னையே தியாகம் செய்து பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தேன், என்னைப் புரிந்து கொள்ளாத நம் நகர மக்கள் என்னை அவமானப்படுத்தினர், யாருமற்ற நான், யாவரும் குடிநீர் பெற்று கஷ்டமின்றி வாழ என்னையே அர்ப்பணித்தேன்”. இந்தக் குறிக்கோளை அடைய எண்ணிய இந்த நல்ல மனிதர், யாருமற்றவராகவே வாழ்ந்து யாருமற்ற அனாதையாகவே மரித்தார்.

அன்பான வாசகரே! கைஸானைப் போலவே, பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்த ஒருவர் எல்லாராலும் வெறுத்து புறக்கணிக்கப்பட்டவராக இருந்தார். இவருடைய வாழ்க்கையும் முழுமனதுடன் தரித்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே இருந்தது, தலை சாய்க்கக் கூட அவருக்கு இடமில்லை. “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2.கொரி.8:9) சாந்த சொரூபியான இவரை, மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் அளவில், ஜனங்கள் வெறுத்து, ‘அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்” இவர் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தாமல் தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். கொடிய ஜனங்கள் இவரை சிலுவையில் அறைந்தார்கள். கேலிக்கும் பரியாசத்திற்கும் தன்னை முழுவதுமாக இவர் அர்ப்பணித்தார். நிந்திக்கப்படும் இவர் யார்? அன்பின் வடிவமான இயேசு பெருமான் நம் நிந்தையை நீக்க யாவற்றையும் பொறுமையுடன் சகித்தார்”. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்”. (ரோமர் 4:25)

கைஸானின் தியாகம் மார்ஷிலெஸ் நகர மக்கள் யாவருக்கும் நல்ல தண்ணீர் கிடைக்க வழியுண்டாக்கினது. ஆனால் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்திருக்கிறபடியால், தம்மிடம் வரும் மக்கள் அனைவரின் ஆத்தும தாகத்தை தீர்க்கும் ஜீவத்தண்ணீரை கொடுப்பவர் மட்டுமல்ல, அவர். அவரே ஜீவத்தண்ணீர். நண்பரே! வற்றாத ஜீவநதியாகிய இயேசு பெருமானிடம் வந்து தாகம் தீர்த்துக்கொள்ள மாட்டீரா! ஜீவத்தண்ணீர் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. “விலையுமின்றி பணமுமின்றி’ இலவசமாக அதை நாம் பருகலாம். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே. நீங்கள் எல்லாரும் தண்ணீரண்டைக்கு வாருங்கள்’ (ஏசாயா 55:1).

“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்துபானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலும் தாகமடையான்” (யோவான் 6:35). “விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன் (வெளி.22:17).