முகப்பு தினதியானம் அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்

யூலை 08

“அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி நமதுமேல் கோபமாய் இருக்கமாட்டார் என்று வாக்குப்பண்ணியுள்ளார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நாம் திருந்தவேண்டும் என்பதற்காகவே அவர் கோபிக்கிறார். பேதுருவின் மனதை நோகப்பண்ணி அழுகையோடும் விண்ணப்பத்தோடும் அவனைத் திரும்பினதுபோல நம்மையும் திரும்ப நோக்கிப் பார்ப்பார். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, சமாதானத்தோடே போ என்று மரியாளுக்குச் சொன்னதுபோல் நமக்கும் சொல்லுவார்.

நம்முடைய பயங்களை ஓட்டி நம்மைத் தம்முடைய மடியில் சேர்த்து தமது அன்பை நம்மேல் பொழிவார். அவர் வாக்குபண்ணினவைகளை மாற்றாது அப்படியே செய்வார் எப்பொழுதும் அப்படிச் செய்வார். அவர் இருதயம் அன்பினால் நிறைந்திருக்கிறபடியால் அப்படிச் செய்வார் என்பது நிச்சயம். அவர் இரக்கத்தில் பரியப்படுகிறவர் என்பதால் அப்படிச் செய்வார் என்று சொல்லலாம். நம்முடைய புத்தியீனத்தைக் குறித்து நாம் புலம்பினாலும், அவர் மன்னிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. பட்சமும் கிருபையும் நிறைந்த தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கினோம் என்று அழுதாலும் மனம் கலங்க வேண்டியதில்லை. நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவர் திரும்ப இரங்குவார் என்று எதிர்பார்த்திருப்போமாக இஸ்ரவேல் வீட்டாருக்குத் தம்மை மறைத்துக்கொள்ளுகிற கர்த்தருக்குக் காத்திருந்து அவர் வருகைக்கு ஆயத்தமாய் இருப்போமாக.

இயேசுவே எங்கள் துன்பங்கண்டு
உருக்கமாய் இரங்குமேன்
எங்கள்மேல் கிருபைகூர்ந்து
சகல பாவம் நீக்குமேன்.