முகப்பு தினதியானம் நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08

“நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?.” யோவான் 6:67

ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் லோத்தின் மனைவிப்போல திரும்பிப் பார்க்கிறார்கள். பெத்தேலிலிருந்து வந்த தீர்க்கதரிசியைப்போல் சோதனைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். எத்தனைப் பேர் தோமைவைப்போல ஆண்டவரை நேசித்து பிறகு விசுவாசத்தை விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் நீங்களோ இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்வரை அவரை விட்டு பின் வாங்கவே கூடாது என்று தீர்மானியுங்கள்.

இயேசுவை விட்டுப் போகிறது பின்மாறிப்போகிறது ஆகும். இது ஒளியைவிட்டு இருளுக்கும், நிறைவை விட்டு குறைவுக்கும், பாக்கியத்தை விட்டு நிர்ப்பந்தத்துக்கும், ஜீவனை விட்டு மரணத்திற்கும் செல்வதாகும். கிறிஸ்துவை விட்டு போனால், வேறு யாரிடம் போவோம்? உலகமும் அதில் உள்ள பொருள்களும், நிலையான ஆத்துமாவுக்கு சமமாகாது. நம்மில் சிலர் நான் தேவ பிள்ளை என்று சொல்லி உலகத்தை இச்சித்து அதன்பின் சென்று விடுவதால் பின்வாங்கிப் போகிறோம் என்று அறியாதிருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள். எப்போதும் நாம் விழித்திருக்க வேண்டும். தேவனைவிட்டு விலகுகிறோமா என்று எல்லா காரியங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். தன்னை நிற்கிறவன் என்று சொல்லுகிறவன், தான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கடவன்.

ஒரு நிமிஷமாவது இரட்சகரை விட்டு பரிந்து போவதற்கு வழியே இல்லை. அவரை விட்டு பின் வாங்கிப் போவது புத்தியீனம். அவருடைய நியமங்களை அசட்டை செய்வது தவறு. அவருக்கு முதுகைக் காட்டுவது துரோகம். ஆத்துமாவே உன்னையும் பார்த்து, நீ என்னை விட்டுப் போகிறாயா என்று அவர் கேட்கிறார்.

ஒன்றை தேவை என்றீரே
அதை எனக்குத் தாருமே
நான் உம்மை விட்டு,
ஒருபோதும் விலகாதிருக்கட்டும்.