யூலை 21
“தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” எபி. 12:24
பாவத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம் பாவியின் மேலே சிந்தப்பட்டது. முந்தினது பாவநிவர்த்தியை உண்டாக்கிற்று. பிந்தினது செலுத்தினவன் சுத்தமானான் என்று காட்டிற்று. இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இரத்தம். அது பாவிகளுக்குச் சமாதானத்தை உண்டாக்கிற்று. சமாதானத்தைக் கூறுகிறது. அது சகல பாவத்தினின்றும் நம்மைச் சுத்திகரிக்கிறது. இது நமக்குத் தவறாமல் புண்ணியமாய்ப் பலிக்கத்தக்கதாய் நடப்பிக்கிறது. அது காயப்பட்ட மனச்சாட்சியை ஆற்றி, நம்முடைய ஊழியத்தைச் சுகந்த வாசனையாக்கி உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறது. பஸ்காவின் இரத்தம் இஸ்ரவேலரைக் காத்ததுப்போல இயேசுவின் இரத்தம் நம்மை பத்திரப்படுத்தி, நித்திய நீதிக்குத் திருப்தி உண்டாக்குகிறது.
இந்த இரத்தம் குற்றவாளிக்கு மன்னிப்பையும், செத்தவனுக்கு ஜீவனையும் சிறைப்பட்டவனுக்கு விடுதலையையும், கிருபையற்றவனுக்கு கிருபையையும் கொடுக்கிறது. இந்தத் தெளிக்கப்பட்ட இரத்தத்தண்டைக்குத்தான் விசுவாசிகளாக வருகிறோம். இந்த இரத்தம் நமக்காகப் பரிந்து பேசுகிறதைக் கேட்க வருகிறோம். ஆபேலின் இரத்தத்தைவிட அது மேலான காரியங்களைச் சொல்கிறது. தேவனண்டைக்கு நம்மை ஒப்புரவாக்குகிறதினால் அதன்மேல் நம்பிக்கை வைக்க வருகிறோம். அதை ருசிக்கவும், அதனால் ஏற்படும் பாக்கியத்தை அனுபவிக்கவும் வருகிறோம். இரக்கத்தையும் அவசியமான வேலைக்கு வேண்டிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும், அவர் இரத்தமூலமே வருகிறோம். இதில் நாம் சந்தோஷப்பட வருகிறோம். ஏனெனில் அது ஆறுதலுக்கும், சந்தோஷத்திற்கும் ஊற்று. குற்றத்தால் வருத்தப்பட்டு, பயத்தால் கலங்கி, சாத்தானால் பிடிபட்டு, குறைவால் வருத்தப்பட்டு மரணம் நம்மை சமீபித்து வரும்போது நாம் அதனண்டையில்தான் போகவேண்டும்.
கிறிஸ்து சிலுவையில்
தன் குருதி சிந்தினார்
அவர் தேகம் பட்ட காயம்
எனக்களிக்கும் ஆதாயம்.