அக்டோபர் 15
“உங்கள் இருதயம் துவள வேண்டாம்” உபா. 20:3
உன் நாள்களைப்போலவே உன் பெலனும் இருக்கும் என்னும் வசனத்தை நினைத்துக்கொள். என் கிருபை உனக்குப் போதும் என்று கூறிய ஆண்டவரை நினைத்துப்பார். ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய், என்று சொன்ன தேவனின் வல்லமையைப் பார். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவெட்டார் என்ற கர்த்தருடைய வாக்குறுதியை மறவாதே. நான் ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று தாவீதரசனைப் போல் உணர்ச்சியுடன் கூறு.
துவண்ட உன் ஆத்துமா தேவனின் செயலை நம்பட்டும். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பென் கொடுத்து, சத்துவம் இல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்றும் கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையால் பெலன்படு என்றும் பவுலடியார் கூறியதைச் செய். நீ கலங்க வேண்டாம். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. சத்துருக்களுக்குத் தண்டனை கொடுத்தாயிற்று. உனது பரமவீடு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறதுது. உனக்குத் தேவையானவை எல்லாம் உறுதியாக உனக்குக் கிடைக்கும். ஆண்டவர் உனக்காக அக்கறை கொள்கிறார். உன் பரமபிதா உன்மீது கரிசனை கொண்டவர். நடப்பவை அனைத்தும் உன் நன்மைக்காகவே நடக்கிறது. எதற்கும் நீ அஞ்சத்தேவையில்லை. மனம் துவண்டு போகத் தேவையில்லை. விசுவாசத்துடனிரு. அவர் உன்னை எல்லாத் தீங்கினின்றும் காப்பார். உனக்குத் தெரியாத பலத்த காரியங்களை அவர் உனக்காகச் செய்வார். நீ மனம் துவள வேண்டாம்.
என் வல்லமையுள்ள நேசர் இயேசு
என் நேசர் உண்மையுள்ளோர்,
என்னைக் கடைசி மட்டும் காப்பார்
எனக்குத் தம் வீட்டைத் தருவார்.