முகப்பு தினதியானம் என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்

என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்

யூலை 22

“என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” நீதி. 8:32

கர்த்தருடைய வழிகள் பலவகையானவை. அவை எல்லாம் மகிமைக்கும், கனத்திற்கும், சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் நம்மை நடத்தும். இரட்சிப்பின் வழி குற்றத்தினின்றும் பாவத்தின் வல்லமையிலிருந்தும், தண்டனையினின்றும் நம்மைத் தப்புவிக்கும். சமாதான வழி சமாதானத்தை அடையவும் அதைக் காத்துக் கொள்ளவும் ஏற்ற பரிசுத்த வழி ஆகும். அதிலே சமாதானத்தை அடைந்து அதில் விருத்தியடைவோம். சத்திய வழியும் உண்டு. சத்தியத்தை அறிந்து, அனுபவம் பெற்று அதில் நடந்து வளருவோம். இன்னும் மேலான வழி அன்பின் வழியாகும். அதனால் நமது விசுவாச மார்க்கத்தை அலங்கரித்து பிறர்க்கு நம்மை செய்கிறோம். தங்கள் கண்களை அந்த வழிகளின்மேலும், இருதயத்தை அவ்வழிகளிலும், தங்கள் பாதங்களை அவைகளிலும் விசுவாசிகள் வைக்கிறார்கள்.திடமாய்ப் பார்த்து, செம்மையானதைத் தெரிந்து, பயபக்தியாய் நடந்து, விழிப்பாய் ஜீவனம்பண்ணி, விருத்தி அடைந்து, மேன்மையாய் நடந்து, மகிமையாய் முடிக்கிறார்கள். இதை வாசிக்கும் நண்பரே, நீவிர் கர்த்தருடைய வழிகளில் நடக்கிறீரா? மற்ற எல்லாவற்றையும்விட அவருடைய வழிகளையே நேசித்து அவைகளை நல்லது என்று எண்ணுகிறீரா?

விசுவாசத்தால் மட்டுமே இவ்வழிகளில் பிரவேசிக்க முடியும். அவற்றிலே நடக்கவும் முடியும். விசுவாசத்தினாலே கிருபையைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறோம். விசுவாசத்தினாலே தேவனோடு சமாதானம் பெறுகிறாம். விசுவாசத்தினால் இதயம் சுத்தமாகிறது. தேவ சத்தியத்தை விசுவாசத்தால் மட்டுமே அறிகிறோம். விசுவாசம் அன்பினால் கிரியை செய்கிறது. என் வழிகளைக் காப்பார்கள் என்று வேத வசனம் புகழ்ந்துக் கூறுகிறது.

அலைந்து திரியும் என்னை
உம்மிடம் வைத்துக்கொள்ளும்
நீர எனக்குப் போதியும்
என் நாவு உம்மைப்பாடும்.