முகப்பு தினதியானம் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்

யூலை 30

“பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” 1.சாமு.15:22

சடங்குகளைப் பெரிதாக எண்ணுவது மனித இயற்கை. இஸ்ரவேலரும் அப்படியே செய்தார்கள். எண்ணிக்கையற்றோர் இன்றும் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதைவிட கிறிஸ்து முடித்த கிரியையினால் ஜீவனும் சமாதானமும் கிடைக்கும் என்று நம்பி, தேவனை நேசிக்கிற நேசத்தால் உந்தப்பட்டு வேதப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுவதே தேவனுக்குப் பிரியம். கீழ்ப்படிகிறதுதான் பலியைப் பார்க்கிலும் உத்தமம். கீழ்ப்படியும்போது நமக்கு நியாயமாய் தோன்றுகிறதை தள்ளி, மனட்சாட்சியின்படி தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அதற்கு இணங்கி முழுமனதோடு அந்த அதிகாரத்திற்கு கீழ் அடங்க வேண்டும். அப்படிப்பட்ட கீழ்ப்படிதல்தான் எல்லா பலியைப் பார்க்கிலும் உயர்ந்தது. இப்படி கீழ்ப்படியும்போது அவர் ஞானமும், தயவும் உள்ளவர் என்று அறிக்கையிட்டு அவருடைய சித்தத்திற்குச் சந்தோஷமாய் இணங்குகிறோம்.

இப்படி நாம் கீழ்ப்படிவது தேவனுக்குப்பிரியமாய் இருக்க வேண்டுமானால் நாம் தேவ வசனத்துக்கு ஒத்து, உத்தமமாயும், தாழ்மையாயும் எப்போதும் மாறாமலும் இருக்கவேண்டும். அப்போது தான் நாம் செலுத்தும் எந்தக் காணிக்கையிலும் நாம் சிக்கக்கூடிய எந்த வருத்தத்திலும் அது அதிக நலமாய் இருக்கும். பிதாவைப்போல நாம் இயேசுவை நேசித்தாலும் அவருக்கு மனப்பூர்வமாய் கீழ்படிய வேண்டும். அவர் அருளிய வாக்குத்தத்தங்களை நம்புகிறதோடு அவர் அதிகாரத்தையும் மதிக்க வேண்டும். பிதாவின் நேசத்தை ருசிக்கிற பிள்ளைகளைப்போல் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் நமக்குச் செய்யும் நன்மைகளுக்குப் பதிலாக நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்பதற்கு சாட்சியாகவும் அவரோடு ஐக்கியப்படுகிறோம் என்பதற்கு நற்பலனாகவும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

பரம ஞானம் தந்தும்மை
பிரியப்படுத்தச் செய்திடும்
விருப்பத்தோடு செய்கையும்
என்னில் உண்டாக பண்ணிடும்.