முகப்பு தினதியானம் ஒகஸ்ட் தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.