பெப்ரவரி 21
“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” எபி. 12:6
எல்லா விசுவாசிகளையும் தேவன் நேசிக்கிறார். ஆகையால் எல்லா விசுவாசிகளையும் அவர் தண்டிக்கிறார். தண்டனைதான் அவர் அன்புக்கு அத்தாட்சி. நாம் பி;ளைகளாயிருப்போமானால் தண்டனை நமக்கு அவசியம் வேண்டும். அப்படி அவசியமான தண்டனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரை நஷ்டம் வரும்படி வியாதிமூலம் தண்டிக்கிறார். சிலருக்குக் குடும்பப் பிரச்சனைகளினால் தண்டிக்கப்படுகிறார்கள். தேவனுடைய ஒரே பிரம்பால் நாம் தண்டிக்கப்படாவிட்டாலும், ஒரே கரந்தான் நம்மெல்லாரையுமே தண்டிக்கிறது. ஒரே வகையாய் நாம் எல்லாரும் சீரடையாவிட்டாலும் நம்மெல்லாரையும் சீர்ப்படுத்துகிறவர் ஞானமும் அன்பும் கொண்ட ஒரே பிதாதான்.
சிலர் மனதில் வருத்தப்படுகிறார்கள். சிலர் சரீரத்தில் துன்பப்படுகிறார்கள். சிலர் தங்களின் உறவினர்கள்மூலம் தண்டனையடைகிறார்கள். எந்த அடிகளும் அன்பால் விழுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. தண்டனை நமக்கு வருத்தத்தைத்தான் கொடுக்கும், பிதாவும் அப்படியே வருத்தம் அடைவார். அவர் வேண்டுமென்று நம்மை தண்டிக்கிறதில்லை. தமது இஷ்டப்படி நம்மைத் துன்பப்படுத்துகிறதில்லை. சில சமயங்களில் நமது புத்தியீனமும் நமது துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. நமது பாவங்கள்கூட பிதாவின் கடிந்துக் கொள்ளுதலை அவசியமாக்குகிறது.
இன்று நமது பிதாவின்கீழ் நம்மைத் தாழ்த்துவோமாக. நம்மை அவர் தண்டிக்கும்போது அவர் நமக்குச் சொந்தம் என்றும் நம்மை நேசிக்கிறாராயென்று நாம் சந்தேகிக்கக்கூடாது. நமக்குத் தண்டனை அவசியமில்லையென்று எண்ணி அவைகளை அசட்டை செய்யாதிருப்போமாக.
தேவ தண்டனை எனக்கு
வருத்தமாகக் கண்டாலும்
அதற்கே கீழடங்குவேன்
தேவ சித்தமே நலம் என்பேன்.