முகப்பு தினதியானம் தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

யூன் 18

“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4

பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.

தேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.

ஜெபியாதவனுக்கு
மகிழ்ச்சி ஏது?
கேளாதவனுக்கு
கிடைப்பதெப்படி?