முகப்பு தினதியானம் ஏன் சஞ்சலப்படுகிறாய்

ஏன் சஞ்சலப்படுகிறாய்

நவம்பர் 02

“ஏன் சஞ்சலப்படுகிறாய்” 1.சாமு. 1:8

அன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய்? பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று வேதம் கூறுகிறது.

நம்முடைய பாவஙகளை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று கூறுகிறது. அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி மேல் அவரின் பிரசன்னம் எனக்குக் கிடையாது என்றெல்லாம் சஞ்சலப்படுகிறாயோ?  அவர் திரும்பவும் வந்து நம்மேல் மனதுருகுவார். அவரின் உடன்படிக்கைகள் உண்மையானவைகள். மாறாதவைகள். அவரது முகம் நமக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் அவர் தமது வாக்கை மாற்றமாட்டார்.

நான் கனி கொடுக்க முடியவில்லையே என்று சஞ்சலப்படுகிறாயோ? அவர் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல இருப்பார். தானிய விளைச்சலைப்போல் செழித்து திராட்சைச் செடியைப்போல் அவர்கள் படருவார்கள். உன்னையும் அதிகக் கனிகளைக் கொடுப்பதற்காகச் சுத்தம் செய்வார். வறுமையால் கஷ்டப்படுகிறாயோ? வெள்ளியும் பொன்னும் எல்லாம் அவருடைய அதிகாரத்துக்குள் இருக்கிறது. தமக்கு விருப்பமானபோது அவர் நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். உனக்கருமையானவர்களை இழந்து விட்டதால் சஞ்சலமோ? அவர் உன்னைத் தாங்குவார். உன்னைத் தூய்மையாக்குவார். அவரின் அன்பு உனக்கு அமைதியும் பாதுகாப்பும் தந்திடும்.

சஞ்சத்தால் தவிக்கும்போது
இரட்சகரிடம் போய்ச் சேர்
இரட்சகரை நீ நம்பினால் உன்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.