முகப்பு தினதியானம் ஒகஸ்ட் உன் உக்கிராணக் கணக்கையொப்புவி

உன் உக்கிராணக் கணக்கையொப்புவி

ஓகஸ்ட் 12

“உன் உக்கிராணக் கணக்கையொப்புவி”  லூக்கா 16:2

நமக்கெல்லாருக்கும் ஒவ்வொரு வேலையைத் தேவன் வைத்திருக்கிறார். அது பொறுப்பான நம்பிக்கையுள்ள வேலை. அந்த வேலைக்கு தலையும், மனமும், கைகளும், கால்களும் வேண்டும். இந்த உக்கிராணக்காரன் சுறுசுறுப்பும், உண்மையும் ஜாக்கிரதையுமாய் இருந்து கணக்கொப்புவிக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் எல்லாரும் கணக்கு கொடுக்கவேண்டியவர்கள். வெகு சீக்கிரத்தில் நாம் கணக்கொப்புவிக்கவேண்டும். நமது எஜமான் சீக்கிரம் வரப்போகிறார். அப்போது அவரை எதிர்கொண்டு போகாமல் பின்னடைவோமா? நம்முடைய செல்வாக்கு, பணம், யோசனைகள், செயல்கள் இவைகளை எப்படி பயன்படுத்தினோம். ஆத்துமாவின் வேலைகளில் என்ன பங்கேற்றோம்? எப்படி தேவனுக்குரிய காரியங்களில் நாம் ஈடுபட்டோம். இவைகளையெல்லாம் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.

நண்பரே, நீ ஒர் உக்கிராணக்காரன் என்பது உனக்குத் தெரியுமா? வேதம் உன் எஜமான் இயேசு கொடுத்த சட்டம். உன் நடக்கைக்குப் பிரமாணம். இதைத் தியானிக்கிறாயா? உன் எஜமானுடைய கண் உன்மேல் இருக்கிறது. இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிறாயா? இந்த வசனத்துக்குப் பயப்படுகிறாயா? கர்த்தருடைய நாள் சமீபித்து வருகிறது. நம்முடைய கணக்குகளை ஒப்புவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டது. இப்பொழுது உன் காரியம் எப்படியிருந்தாலும் உண்மையுள்ள உக்கிராணக்காரனுக்கு அப்போது தேவனால் புகழ்ச்சி கிடைக்கும். இப்போதாவது உன் பொறுப்பை உணர்ந்து, அதற்கு ஏற்றதாய் நடந்தால் எவ்வளவு நலம்!

நியாயாதிபதியாம் கர்த்தாவே
உமக்குமுன் நான் நிற்பேன்
அப்போது குற்றமற்றுவனாக
விளங்கி மகிழ்வேன்.