ஓகஸ்ட் 01
“கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.” 2.சாமு. 12:13
தாவீது இராஜா உரியாவின் மனைவியிடம் பாவம் செய்தது பெரிய பாவம். உரியாவைக் குடிக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்து இது தேவனால் நடந்தது என்று காட்டி கவலையற்றவனாய் நாள்களைக் கழித்தான். பிறகு பாவ மயக்கத்தை விட்டெழுந்து தான் செய்த அக்கிரமத்தைத் தாழ்மையோடு கர்த்தரிடம் அறிக்கையிட்டான். அவன் உணர்ந்து அறிக்கையிட்டபடியினாலும், மனவேதனையோடு ஜெபித்தபடியினாலும் அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். பாவமானது தேவனுக்கு முன்பாக பாவியைக் குற்றம் சாட்டுகிறது. பாவத்திற்கு விரோதமாக நமக்காகப் பரிந்து பேசும் ஒருவர் வருகிறார். அவரே இயேசுவானவர்.
இயேசு கிறிஸ்துவே கொடிய பாவங்களுக்கு மன்னிப்பளிக்கிறார். பாவத்தை மன்னித்தும் மறந்து விடுகிறார். நம் தேவனைப் போல் மன்னிக்கிறதற்கு அவருக்கு இணையாக ஒருவருமில்லை. தன் பாவங்களைத் தாராளமாய் அறிக்கையிடுகிற மனிதனுக்குத் தேவன் மனப்பூர்வமாய் இலவசமாய் மன்னிக்கிறார் என்பதை நினையில் கொள்ள வேண்டும். தேவனானவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது நமது சத்துருக்கள் அதைத் தேடியும் கண்டுபிடிக்க மாட்டார்கள். உன்னுடைய பாவங்களைத் தேவனுடைய முதுகிற்குபின் எறிந்துவிட வேண்டுமானால் நீ அடிக்கடி அவற்றை அறிக்கையிட்டு சரிசெய்துக் கொள்ள வேண்டும். அவருக்குமுன் உன்னைத் தாழ்த்தி உன்னை சரிசெய்து கொள். உன் ஆத்துமாவில் அன்பையும் நன்றியறிதலையும் தேவ மன்னிப்பு ஊற்றிவிடும். தாவீதும் இப்படியே ஜெபித்தான். என் பாவம் எப்போதும் எனக்கு முன் நிற்கிறது என்றான். மன்னிப்பு தேவையானால் ஒரு பாவி பாவத்திற்காகத் துக்கப்பட்டு மனஸ்தாபப்பட வேண்டும். நீயும்கூட பாவத்திற்கு விரோதமாய் விழித்திரு. அப்போது பாவம் செய்யமாட்டாய்.
மன்னிப்புத் தரும் இயேசுவே
என் பாவம் மன்னியுமே
நீர் என் பரிகாரியே
காயம் கட்டி ஆற்றுமே.