ஓகஸ்ட் 07
“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11
இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.
எப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.
தேவ பயமுள்ளவர்
கர்த்தருக் கருமையானவர்
அவர் கிருபை தேடுவோர்
அவர் அன்பைக் பெறுவோர்.