முகப்பு தினதியானம் செப்டம்பர் தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13

“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10

பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.

பவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.

நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்களா? முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.

எம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்
அதை உம்மைப்பற்றி அறிவால்
என்றும் நிரப்பிடும் உம்மை
அறிவதே எமக்கு நித்திய ஜீவன்.