முகப்பு தினதியானம் அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

மார்ச் 07

“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா.” மத். 6:6

கர்த்தருக்குத் தெரியாமல் யாராவது தன்னை இரகசியமான இடங்களில் மறைத்துக்கொள்ளக்கூடுமோ? ஒரு கிறிஸ்தவன் எந்த வகையிலாவது தன்னை அவரிடமிருந்து ஒளித்துக்கொள்ள முடியாது. எப்போதும் கர்த்தருடைய கண்கள் என்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அவர் என்னை நன்றாய்ப் பார்க்கிறார். அது என் தகப்பனுடைய கண்கள். என் பிதா என்னை அந்தரங்கத்திலிருந்துப் பார்க்கிறார். என் சத்துருக்களின் இரகசிய கண்ணிகளுக்கு என்னைத் தப்புவிப்பார். என்னைச் சேதப்படுத்தவிருக்கும் தீங்கிற்கு என்னை அருமையாய்த் தப்புவிப்பார்.

என் இதயத்தின் போராட்டங்களையும், என் அந்தரங்க சோதனைகளையும், அவர் பார்த்து அறிந்துக்கொள்கிறார். நான் ஜெபிக்கக்கூடாதபோது அவரை நோக்கிப் பார்ப்பதை அவர் பார்த்தறிவார். என் குறைவுகளையும், நிர்பந்தங்களையும் அவர் கண்ணோக்குகிறார். என் இரகசியமான பாவங்களையும் பொல்லாத சிந்தனைகளையும், தகாத தீய செயல்களையும் அவர் கவனிக்காமலில்லை. எத்தனை பயங்கரமான ஒரு காரியம் இது. இப்படி கண்ணோக்குகிற ஒரு தேவன் நமக்கிரு;கிறபடியால், இனி சோதனைக்கு இடங்கொடாமல், அவர் வழிகளுக்கு மாறாய் செய்யாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். என் பரமபிதா என்னைப் பார்க்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடமும், என்னைப் பார்க்கிறார். என் உள்ளிந்திரியங்களையும் பார்க்கிறார். என் யோசனைகளையும் விருப்பங்களையும் அவர் பார்க்கிறார். இப்படிப் பார்க்கிறவர் எந்தப் பாவத்தையும் அளவற்ற பகையாய்ப் பார்க்கிறார்.

நான் எங்கே இருந்தாலும்
தேவ சிந்தை என்னை காணும்
நீர் என்னைக் காணும் தேவன்
பாவத்தை வெறுப்பேன் நான்.