செப்டம்பர் 14
“பேதுரு தூரத்திலே பின்சென்றான்.” மத். 26:58
எத்தனை முறைகள் நாம் பேதுருவைப்போலப் பின் வாங்கிப் போயிருக்கிறோம்? நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே! விசுவாசம் நம்மை அவருக்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். ஆனால், அவிசுவாசம் நம்மை அவரை விட்டுப்பிரிக்கிறது. நம்முடைய நன்மைகளில் நஞ்சாக அவிசுவாசம் இருக்கிறது. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாதபடிக்கு நம்மைப் பெய்யராக்குகிறது. நம்முடைய பக்தி வைராக்கியத்தைக் குலைத்து, இயேசுவுக்கு நம்மைத் தூரமாக்கி விடுகிறது. அவருடைய வழிகளை விட்டு நம்மை விலக்கி, நம்மை அந்நியராக்குகிறது.
நாம், நமது இருதயத்தில் விசுவாசத்தை வளர்த்து நம்மைத் தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது நடையை வேகமாக்கும். ஆண்டவரை நெருங்கி இருக்கச் செய்யும். நமது இருதயத்தைப் பெலப்படுத்தி, நமது இரட்சகரில் மகிழச்செய்யும். எனது நண்பா, நீ கர்த்தருடன் செல்பவனா? அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா? எச்சரிக்கையுடனிரு. தூரத்தில் பின்செல்லாமல், அருகிலேயே இரு. அவருடனே நடந்து அவரையே நினைத்து உன் பாரத்தை அவர்மேல் வைத்து, அவரையே சார்ந்திரு. தாயின் மார்பில் ஒட்டியிருக்கும் குழந்தையைப்போலவே அவரில் ஒட்டிக்கொண்டிரு.
இயேசுவோடு ஐக்கியப்பட்டு
அவர் குரலைக் கேட்டிருப்பவன்
தன்னை முற்றிலும் துறந்து
அவரிலேயே ஒளிந்திருப்பான்.