செப்டம்பர் 05
“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்” ஆப. 3:18
இது நல்ல தீர்மானம். நமக்கிருக்கும் எந்தச் சூழ்நிலை மாறினாலும், மனிதர்கள் மாறினாலும் கர்த்தர் மாறாமல் இருக்கிறார். வெளிச்சம் இருட்டாயும், சாமாதானம் சண்டையாயும், இன்பம் துன்பமாயும், சுகம் வியாதியாயும் மாறினாலும் நாம் அவருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். நமக்கு சம்பவிக்கும் காரியங்கள் எப்படியிருந்தாலும் நாம் இன்னும் கர்த்தருக்குள் மகிழலாம். ஆபகூக்கைப்போல நாம் இருக்கவேண்டுமானால், கர்த்தர் நமக்குச் சொந்தமாக வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடையதாக வேண்டும்.
அவருடைய நாமத்தைக் குறித்து நம்முடைய மனதிற்கு தெளிவான, வேத வசனத்திற்கு இசைந்த எண்ணங்கள் உண்டாக வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது. நாம் தேவனோடு ஒப்புரவாயிருக்கிறோம். ஆகவே, அவர் நம்முடைய உத்தம சிநேகிதன் என்று உணர வேண்டும். அப்போது எக்காலத்திலும் அவரில் நாம் மகிழலாம். அவரின் நிறைவுகள்தான் நமக்குப் பொக்கிஷம். அவருடைய வல்லமை நமக்கு ஆதரவு. அவருடைய அன்பு நமக்கு ஆறுதல். அவருடைய வாக்கு நமக்குப் பாதுகாப்பு. அவருடைய சிம்மாசனம் நமக்கு அடைக்கலம். அவருடைய சமுகம் நமக்குப் பரலோகம், தேவனிடத்திலுள்ள எதுவும் நமது சுகத்தை விருத்தியாக்கும்.
அன்பானவர்களே, இந்த இரவு கர்த்தரிடத்தில் போய், அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து வந்துள்ளோம் என்று சொல்லுங்கள். நீங்கள் அவருடைய நன்மையை உணர்ந்து, அவருடைய வாக்குத்தத்தங்களை எடுத்துச் சொல்லி, அவருடைய கிருபைக்காகக் கெஞ்சுகிற சத்தத்தை அவர் கேட்கட்டும்.
தேவனே என் ஆஸ்தி
என் மகிழ்ச்சியின் ஊற்று
வறுமையிலும் அது வற்றாது
மரணத்திலும் ஒழியாது.