முகப்பு தினதியானம் தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்

தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்

நவம்பர் 07

“தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்” அப். 28:15

பவுலுக்கு அவன் சிநேகிதர்கள் காட்டின அன்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்து இதற்காக அவன் தேவனைத் துதித்து தைரியம் அடைந்தான். நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா நன்மைகளுக்காகவும் நாம் நன்றி கூற வேண்டும். நன்மையான எதுவானாலும் தேவனிடத்தில் இருந்துதான் வருகிறது. சகல நன்மைகளுக்கும் அவர்தான் காரணர். ஆகவே, ஒவ்வொரு நாளும் அவருக்கு துதிகளைச் செலுத்த வேண்டும். அவர் நம்மை மோசங்களிலிருந்து காத்து, துன்பங்களிலிருந்து விடுவித்து, தயவாக நன்மைகளைக் செய்கிறார். ஆகவே இப்போது நாம் அவருக்கு நன்றி சொல்லுவோம்.

இனிமேல் நமக்கு நேரிடும் குறைவுகளில் நமக்குத் தேவையானதைத் தருவார். நமக்காக சிறப்பான வாக்குகளைக் கொடுத்திருக்கிறார். சகலமும் நமது நன்மைக்காக கிரியை செய்ய நிச்சயம் செய்திருக்கிறார். தேவன் நம்மைக் கைவிடுவதில்லை என்று வாக்களித்திருக்கிறார். ஆகவே, தைரியமடைந்து துதி செலுத்தி, நன்றியுள்ளவர்களரிருப்போம். நமது வழி கரடு முரடானதாக இருக்கலாம். சத்துருக்கள் நிறைந்ததாக இருக்கலாம். துன்பங்கள் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும், நம்முடைய பெலன் அதைத் தாங்க போதுமானதாக இருக்கலாம். நமக்குத் தேவையானது கட்டாயம் கிடைக்கும். நமது காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார். இனி சாத்தான் சொல்வதைக் கேளாதே. அவிசுவாசத்திற்கு இடங்கொடாதே. நமக்கு இனி என்ன நடக்கும் என்று பயப்படாதே. இதுவரையில் நம்மை விடுவித்தவர் இன்னும் நம்மை விடுவிப்பார். இதுவரை கர்த்தர் செய்தவைகளை எண்ணிப்பார். உனக்கு அவர் காட்டின இரக்கத்தை சிந்தி. அவர் வாக்குகளை நினை. அதற்காக நன்றி கூறு.

இயேசுவே மீட்டு வழிநடத்தும்,
உம்மை நம்பி நடப்பேன் உம்மோடு
உம் நடத்துதலுக்காக நன்றி
உம் வாக்குகளுக்காக நன்றி.