முகப்பு தினதியானம் ஜனவரி கிறிஸ்து நமக்காக மரித்தார்

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.