முகப்பு தினதியானம் அக்டோபர் இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்

இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்

அக்டோபர் 01

“இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்” ரோமர் 5:11

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் சகல பாடுகளையும் சகித்து, நமக்கு நீதியுண்டாகப் பாவமன்னிப்பையும், நித்திய பாக்கியத்தையும் சம்பாதித்தார். அவர் பலியானது நம்முடைய பாவங்களுக்காகவும், சர்வ லோகத்தின் பாவத்திற்காகவுமே. அவர் செய்த அனைத்தும் நற்செய்தியாகச் சுவிசேஷங்களில் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதினால் சமாதானம் பெறுகிறோம். மனுக்குலத்திற்குத் தேவையானதை எல்லாம் அவர் கல்வாரியில் செய்து முடித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத எவரும் வாழ்வில் சமாதானம் அடைய முடியாது.

ஒவ்வொரு நாளும் இந்த ஒப்புரவாக்குதலில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் நம்மால் அவரோடு மகிழ்ச்சியாக நடக்க முடியாது. முன்னே நாம் அதைப் பெறாமலும், நம்பாமலும் இருந்தோம். இப்பொழுதோ இயேசுவின் கல்வாரி இரத்தத்தினால் அதைப் பெற்று இருக்கிறோம். முன்னே நாம் அதன் தன்மையையும், அருமையையும் அறியாமலிருந்தோம். இப்பொழுது அவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இரக்கமே நமக்குத் தைரியம் கொடுக்கிறது. இயேசுவின் மரணம் நமக்கு வாழ்வு. நமது சமாதானம் அவரே. அவருடைய நீதியின் மேலும், மகத்துவத்தின் மேலும் நாம் நமது கண்களை வைத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இதை மறந்தால் நாம் சாத்தானால் அடிமைகளாக்கப்படுவோம். நமது குற்றங்கள் நம்மைக் கலங்கடிக்கும் போதும், பயம் நம்மை ஆள்கொள்ளும்போதும், நாம் அவருடைய கல்வாரிப் பலியை விசுவாசித்தால், பற்றிப்பிடித்தால், நாம் தைரியசாலிகளாகவும், நீதிமான்களாகவும் பாக்கியமுள்ள தேவ மைந்தர்களாகவும் இருப்போம்.

இயேசுவே, உம் பிராயச்சித்தம்
எவருக்கும் அருமையானதே
சிலுவையையே நித்தம் யாம்
கண்டு பற்றிக் கொள்வோம்.