முகப்பு தினதியானம் எபெனேசர்

எபெனேசர்

நவம்பர் 19

எபெனேசர்” 1.சாமு.7:12

சிருஷ்டிகளாகிய நாம் மோசத்தில் விழக்கூடியவர்கள். வலிமையில்லாதவர்கள். அறிவீனர். நமக்கு எந்த நேரத்திலும் நமது பகைவனான சாத்தானாலும்,  அவன் வைக்கும் கண்ணிகளாலும் ஆபத்து எந்நேரமும் ஏற்படும். நாம் சிறுக சிறுகத் தவறிப்போகிறவர்கள். அச்சத்தால் பீடிக்கப்படுகிறவர்கள். இவ்வாறான நேரங்களில் நமக்கு உதவி செய்திடவே எபெனேசராக தேவன் இருக்கிறார். அவர் நம்மோடே இருந்து, தேவைப்படும்பொழுதெல்லாம் நமக்கு உதவி செய்கிறார். தேவனுடைய ஒத்தாசையினால்தான் நாம் நமது அவிசுவாசத்தையும், பாவ வாழ்க்கையையும் மேற்கொண்டோம். நமது சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்கிறோம். துன்பமும், சோதனையும் வந்தபோதும், எத்தகைய புயலுக்கும் அஞ்சாதிருந்தோம். தேவ ஒத்தாசையாலேயே இம்மட்டும் காக்கப்படுகிறோம்.

ஆகவே, நம்முடைய எபெனேசராகிய தேவனை நம்முன் நிறுத்தி நமக்கு அவர் செய்த உதவியை அறிக்கை செய்வது நமது கடமை. எல்லா உதவிகளையும் நமக்குச் செய்பவர் நமது கர்த்தரே. அவரே ஏற்ற நேரங்களில் உதவியவர். எப்போதும் அவர் நமக்கு உதவி செய்பவராயிருக்கிறபடியால், அவரைத் துதிப்போம். அவரிடத்திலிருந்து நாம் உதவிகளைப் பெற்றதால், நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் யாவை? அவரைத் துதித்து, ஸ்தோத்தரித்து, அவருக்கு நன்றி செலுத்துவோம். இவ்வாறு செய்யும்பொழுது நாம் முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். அவருடைய உதவியும் பிரசன்னமும், என்றும் நம்மோடிருக்கும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். நன்றி செலுத்தும் ஜெபங்களைத் தவறாது ஏறெடுக்க வேண்டும். எபெனேசர் இம்மட்டும் தேவன் நமக்கு உதவி செய்தார். இனிமேலும் செய்வார் என்று அவருடைய உதவிக்காகப் பொறுமையோடு காத்திருப்போம். அவர் செய்த உதவிக்கு சாட்சி சொல்லுவோம்.

இம்மட்டும் காத்தார் தேவன்
எபெனேசர் ஆதலால் போற்றுவேன்
இம்மையிலெல்லாம் நம்புவேன்
இம்மை விட்டவரில்லம் சேருவேன்.