முகப்பு தினதியானம் தமது கிருபையுள்ள வசனம்

தமது கிருபையுள்ள வசனம்

நவம்பர் 20

“தமது கிருபையுள்ள வசனம்” அப். 14:3

அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது. கிருபைதான் இதுவரை வசனத்தை வைத்திருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் மீட்பை இலவசமாகக் கொடுக்கிறது. கர்த்தருடைய ஆசனத்தருகில் வருகிறவர்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறது. நம்முடைய குறைவுகளுக்கெல்லாம் தேவையான நிறைவை மீட்பரின்மூலமாக நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவர்களுக்குப் பரம வீடு நியாயமாகக் கிடைக்கச் செய்கிறது.

நமக்கு மீட்பு கிருபையால்தான் வருகிறது. அதன்மூலமாகவே கர்த்தர் நமது செயல்களை நம் இதயத்தில் நிறைவேற்றுகிறார். கிருபைக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் வெகுவாக வேறுபாடுகள் உண்டு. கிருபை, தேவன் நமக்குக் காட்டிய இரக்கத்தை எடுத்துக்கூறி, எண்ணிலா மேன்மையான நன்மைகளை நமக்குக் காட்டி, நித்திய மீட்பை நமக்கு அறிவிக்கிறது.

அன்பானவர்களே, விசுவாசத்தை நியாயப்பிரமாணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். சுவிசேஷம் எதையும் கட்டளையிடுகிறதில்லை. சுவிசேஷம் மகிழ்ச்சியின் கீதம். அது உங்களுக்குப் பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், விடுதலையையும் பிரசங்கிக்கிறது. அது தேவ இரக்கத்தையும் கிருபையையும்பற்றிய சுபசெய்தி. மனதுக்கு மங்களச் செய்தி. கிரயமுமின்றிக் காசுமின்றிக் கிடைக்கும் இலவச நன்மைகளைப்பற்றிக் கூறும் தேவ செய்தி.

கர்த்தாவே, உமது நேசம்
என்றும் குறையாப் பொக்கிஷம்
எங்கள் பாவங்கள் போலவே
அளவிலடங்காததே.