ஏப்ரல் 22
“அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” சங்கீதம் 116:12
ஒவ்வொரு நாளும் முடியும்போது இப்படி கேட்பது நல்லதல்லோ? இன்று மாலை துதி செலுத்த வேண்டியதாயிருந்தாலும் இந்த நாளில் கடந்த காரியங்களை மட்டும் நினைக்கக் கூடாது. கர்த்தர் நமக்கு செய்தது என்ன என்று நம்மை நாமே கேட்க வேண்டும். அவர் எண்ணிலா நன்மைகளைச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் நன்மையுள்ளவர்களாய், ஆசீர்வாதமுள்ளவர்களாய் நாம் இருக்க மாட்டோம். அவர் கிருபைகளைத் தந்து பயங்களைப் போக்கி, விடுதலையளித்துத் தேவைகளைச் சந்தித்து விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிமைப்படுத்துவேன் என்று வாக்களித்திருக்கிறார். நாம் பெற்றுக்கொள்வதெல்லாம் உபகாரந்தான். அது சுத்தக் கிருபையிலிருந்துப் பிறந்து, அபாத்திரருக்கு நன்மையை அளிப்பதாய் உள்ளது.
பிதா நமக்கு தமது குமாரனைக் கொடுத்தார். நாம் நிறைவேற்றின கிருபைகளைக் கொடுத்தார். ஆவியானவர் தமது ஜீவனைத் தந்து நம் இருதயத்தில் குடிகொண்டுள்ளார். ஆகவே அவருக்கு என்னத்தைச் செலுத்துவோம்? நாம் என்ன செலுத்தக்கூடும்? என்ன செலுத்த மனதாய் இருக்கிறோம்? நாம் வரங்கள் பெற்றிருக்கிறோமென்றால், அதை அவர் புகழ்ச்சிக்கென்று பிரயோகிப்போமாக. அவர் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து, அவர் சத்துருக்களுக்கு விரோதமாய் போராடுவோமாக. அவர் ஊழியத்தில் துன்பங்களைச் சகித்து, ஏழைகளுக்கு நம்முடைய பொருளைக் கொடுப்போமாக. அவரோடு நெருங்கி சஞ்சரிக்கிறதுதான் அவருக்குப் பிரியம். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு அறிவித்து வியாதியுள்ளவர்களைச் சந்தித்து, அவருடைய எளியவர்களுக்கு உதவிசெய். உன் சம்பத்துக்குத்தக்கபடி உன் நன்றியறிதலைக் காட்டு. ஓரே வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்காய் பிரதிஷ்டைப்பண்ணி ஜீவியம்பண்ணு. தேவனுக்காய் பிரதிஷ்டை செய்யப்பட்ட சீஷனாக ஜீவனம்பண்ணு.
கர்த்தர் காட்டும் தயவுக்கு
பதில் என்ன செய்வேன்
அவர் வழிகளைக் காத்து
அவர் சொற்படி நடப்பேன்.