முகப்பு தினதியானம் அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

நவம்பர் 23

“அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து” எசேக். 7:16

கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய தயவைத் தெரிந்த விசுவாசி தன்னை நேசிக்கிற தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தபோது பரிசுத்தமும், நீதியும் நன்மையுமான தேவனுடைய கட்டளையை மீறினேனே என்று துக்கித்துப் புலம்புவான். அவன் தனக்குள்ளே இருக்கும் பாவத்தைக் குறித்து துக்கிப்பான். அந்தப் பாவம் அவனுக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கும். தன் பாவத்திற்காக அவன் விசனப்படுவான். அவன் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறானோ அப்பொழுதெல்லாம் விசனமடைவான். அந்நேரங்களில் அவன் சந்தோஷத்தைக் காண முடியாது. ஆனால் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவனல்ல.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று அவன் அறிவான். தன்னை நேசிக்கும் தேவன் மனந்திரும்பும் பாவியை அங்கிகரிப்பாரென்று அவனுக்குத் தெரியும். ஒருவன் தேவனை எவ்வளவாய் நம்புகிறானோ, எவ்வளவாய் அவரின் அன்பை ருசிக்கிறானோ, அவ்வளவாக அவன் பாவம் செய்தபொழுதெல்லாம் அவனுடைய துக்கம் அதிகரிக்கும். தான் அவரோடு சஞ்சரித்த நாள்களையெல்லாம் நினைத்து, நினைத்துச் சஞ்சலப்படுவான். அவன் படும் துக்கம் அவனுக்கு இரட்சிப்பையும் ஜீவனையும் கொண்டு வரும்.

நண்பரே, நீர் உமது பாவங்களுக்காக துக்கப்படுகிறதுண்டா? பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு, அதன் சந்தோஷத்தை அடைந்த அனுபவம் உமக்கு உண்டா? அப்படி துக்கிக்கவில்லையென்றால், இப்பொழுது உம் பாவத்திற்காய் கண்ணீர் சிந்தும், அவிசுவாசத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.

என் பாவங்களுக்காகவே
நான் துக்கித் தழுவேனாக
துயரப்படுவோர் யாவரும்
பாக்கியராவார் பின் நாளில்.