முகப்பு தினதியானம் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்

உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்

நவம்பர் 22

“உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” நீதி. 3:6

எங்கே போவது, என்ன செய்கிறது என்று திகைக்கிறாயோ? தேவனுடைய செயல்கள் உனது போக்கிற்கும், எண்ணங்களுக்கும் துன்பத்தை உண்டாக்குகின்றனவோ? எரேமியா தீர்க்கனுக்குக் கர்த்தர் போதித்தபடியே உனக்கும் போதிக்கிறார். கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல என்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறது அல்ல என்றும் அறிவேன் என்று எரேமியா சொன்னான். கிருபைக்காகக் கர்த்தரிடத்தில் கேட்டதுபோல, ஞானம் வேண்டும் என்றும் அவரிடத்தில் கேட்க வேண்டும். இரட்சிப்புக்காக அவரிடத்தில் பணிந்து வேண்டிக் கொள்வதுபோல இவர் உன்னை நடத்த வேண்டும் என்றும் அவரைப் பார்த்து வேண்டிக்கொள்ள வேண்டும். அவர் உன் பாதையை முன் கூட்டியே தெரிந்தெடுத்து உள்ளார். அவர் தெரிந்தெடுத்ததைத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், குழந்தையைப்போல அவரண்டைச் சென்று, வழியைத் தெளிவாகக் காட்ட வேண்டும் என மன்றாடு. அப்பொழுது தேவன் தமது செம்மையான வழிகள உனக்குத் தெளிவாகக் காட்டுவார்.

எதையும் செய்ய துவங்குமுன் தேவன் உன்னை நடத்த வேண்டும் என்று ஜெபி. எவ்வேலையைச் செய்யும்பொழுதும், தேவனே என்னோடு வாரும் என்று வேண்டிக்கொள். உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர், உன் பாதையைச் செம்மைப்படுத்துவார். உனக்கு நன்மை செய்ய அவருடைய கண் உன்மேல் நோக்கமாயிருக்கிறது. உன் ஜெபத்தைக் கேட் அவர் காத்திருக்கிறார். உன் குரல் கேட்டுக் கிருபையளிப்பார். உன் விண்ணப்பத்திற்குப் பதில் கிடைக்கும். அவருடைய வசனத்தின்மூலம் அவர் தரும் ஆசீர்வாதங்களைக் கண்டுபிடி. அவரைப் புகழ்ந்து மேன்மைப்படுத்து. அப்போது உன் பாதைகள் சீராகும். அவரால் நீ செம்மையான வழியில் நடத்தப்படுவாய்.

கர்த்தருக்கு உன்னை ஒப்புவி
கர்த்தரை நம்பிக் காத்திரு
அவர் உன்னை நடத்துவார்
அவர் யாவையும் செய்து முடிப்பார்.