முகப்பு தினதியானம் செப்டம்பர் தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக

தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக

செப்டம்பர் 22

“தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக” சங். 3:8

உலகம் உண்டாவதற்கு முன்னமே, தேவனுடைய ஜனம் எல்லா ஞான நன்மைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவால் எல்லா நன்மைகளையும் பெறுகிறார்கள். மறுமையிலும் கிறிஸ்து நாதரோடு வாழ்ந்து அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் அவருடைய கிருபையால் அவர்கள்மேல் இருப்பதனால், அவர்கள் அவரைப் புகழ்ந்து போற்றித் துதித்துப் பாட அவர்களைத் தெரிந்து கொண்டார். இதனால் அவர்களுடைய பரிசுத்த பெருகுகிறது. அந்த ஆசீர்வாதம் தங்கியிருப்பதனால், அவர்களுக்கு நேரிடும் சோதனைகள் யாவும் நன்மையாகவே முடிகிறது. அவர்களுடைய குடும்பத்தின்மேலும் இந்த ஆசீர்வாதம் தங்குகிறது. உடன்படிக்கைப் பெட்டியின்மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட ஓபேத், ஏதோம் என்பவர்களுடைய வீட்டைப் போல் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

அன்பானவர்களே, தேவ ஆசீர்வாதம் உங்கள்மேல் தங்குவது தான் உங்கள் பாக்கியம். இதை அனுபவித்து இருக்கிறீர்களா? தேவ கிருபையால்தான் இது நடக்கிறது என்று அறிவீர்களா? இயேசு கிறிஸ்துதான் இக்கிருபையை உமக்கு அருளுகிறார். விசுவாசத்துடன் கீழ்படிவதனால் இதை அனுபவிக்கலாம். தேவ வாக்குத்தத்தத்தின் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. தேவ பிள்ளையே, உனக்குத் தேவையானதைத் தர தேவன் ஆயத்தமாக இருக்கிறார் என்னும் சிந்தையோடு இன்றிரவு படுக்கைக்குச் செல்லுங்கள். தகப்பனே, என்னை ஆசீர்வதியும் என்று ஜெபித்துப் படுத்துக்கொள். அவரை நம்புகிற யாவரும் பாக்கியவான்கள்.

நான் உம்முடையவன்
என்னை மகிழ்ச்சியாக்கும்
உம் சொந்த மகனாகவே உம்
வாக்குத்தத்தம் பெறுவேன்.