நவம்பர் 10
“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2
தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.
ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.
நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.