முகப்பு தினதியானம் அக்டோபர் நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்

நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்

அக்டோபர் 13

“நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்” யோவான் 8:12

இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வராதிருந்தால், இவ்வுலகம் பாவம் நிறைந்து இருண்டிருக்கும். பாவம் நோய், கொடுமை, அறிவீனம் நீங்கு போன்றவைகளுக்கு அடிமைகளாகவே மக்கள் வாழ்ந்திருப்பார்கள். ஏழு திரிகள் கொண்ட ஒரு விளக்குத்தண்டை யூதர்கள் தங்கள் தேவாலயத்தில் வைத்திருப்பார்கள். அது தேவாலயத்திற்கு மட்டும் ஒளி வீசும். ஆனால் இயசு கிறிஸ்துவோ உலகத்திற்கே ஒளியாய் இருக்கிறார். புற ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் அவர் வந்தார். அவரில் பூரண ஒளி உண்டு. அது என்றுமே அணையாமல் எப்போதுமே பிரகாசித்துக்கொண்டிருக்கும். அவர் தம்முடைய வசனத்தின்மூலம் ஒளிவீசுகிறார். தம்முடைய ஆவியானவரைக் கொண்டு நம் உள்ளத்திற்கு ஒளிதருகிறார். அவர் வீசும் ஒளியினால் பாவிகள் மன்னிப்புப் பெறுகிறார்கள். அவருடைய ஒளியில் வெளிச்சம் காண்கிறார்கள்.

அவர்கள், அவரையே தங்கள் தெய்வமாகக் கொண்டிருப்பதால், வெட்கமடையார்கள். ஜீவ ஒளியைப் பெறுகிறார்கள். பிசாசின் கண்ணிகளுக்குத் தப்பி அவர்களால் நடக்கமுடிகிறது. அவர்கள் பாவம் செய்யாது வாழவே விரும்புகிறார்கள். ஞானத்தோடும் தெய்வ பயத்தோடும் நடக்க முயற்சிக்கிறார்கள்.

அன்பானவரே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நீர் நடக்கிறீரா? அவருக்காக ஒளி வீசும் சாட்சியாக நீர் வாழ்கிறீரா? மற்றவர்களை இவ்வொளிக்கு நடத்துகிறீரா? உமக்கு அவருடைய ஒளி கிடைத்துள்ளதா? இல்லையானால், அவரிடம் வந்து ஒளியைப் பெற்றுக்கொள்ளும். உமக்கு ஒளிதேவை. அதைத் தரும்படி இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும்.

ஜீவ ஒளியே, உம் ஒளி தாரும்
உம் ஒளியால் என் உள்ளம் மிளிரும்
உம் ஒளியால் என் வழி காண்பேன்
அதில் என் வாழ்வு பிரகாசிக்கும்.