முகப்பு தினதியானம் டிசம்பர் தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்

தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்

டிசம்பர் 09

“தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்” ரோமர் 6:23

நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தாம் நிரந்தர உயிர். நமக்கு பரம வாழ்வு உண்டு என்றும் பாவம், துக்கம், துன்பத்தினின்று நாம் விடுதலையாகி, எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றும் தேவன் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். எல்லா நாளும் சந்தோஷமாக அவருக்குப் பணிவிடை செய்வது அவர் நமக்குக் கொடுத்த பாக்கியம். அது இலவசமாய் கொடுக்கப்பட்டது. ஆண்டவரின் கிருபைதான். அது நமக்குக் கிடைத்தது. இதிலேதான் அவருடைய கிருபையின் மகத்துவம் விளங்குகிறது.

பாவம் செய்த தேவதூதர்கள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆனால், நாம் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அவர் நமக்கு நிரந்தர வாழ்வைத் தருகிறார். எந்த மனுஷனுக்கும் இந்த சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றவர் கிறிஸ்து நாதரோடு உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுக்கென்று பிழைத்திருக்கிறான். இவ்வாறான மரணமில்லா வாழ்வை எதிர்பார்த்து நாம் இவ்வுலகில் வாழ்வோம். அந்த அனுபவத்தைப் பெற வாஞ்சை கொண்டு ஒவ்வொரு நாளும் விசுவாச வாழ்க்கையில் முன்னேறுவோம். அருள்நாதர் தம் ஆடுகளுக்கு யாவும் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதும் இல்லை என்பது அவர் வாக்கு.

பரம வாழ்வைத் தாரும்
பரிசுத்த பிதாவே
தேவ கிருபையும் பரிசுத்தமும்
தேவனே தந்தருளும்.