செப்டம்பர் 01
“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11
தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.
பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.
இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.