முகப்பு தினதியானம் டிசம்பர் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக

அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக

டிசம்பர் 17

“அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக” (மத்.1:21)

இயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார். நம்மை இரட்சிக்கவே நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவர் யாவரையும் இரட்சிக்க வல்லவர். எல்லாரையும் இரட்சிக்க மனதுள்ளவர். இயேசுவின் மூலமாக தேவனிடம் வரும் யாவரையும் அவர் இரட்சிக்கிறார். எல்லாப் பாவங்களையும் நீக்கி அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்படியாய் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். தம்முடைய மக்கள் ஒருக்காலும் கெட்டுபோகாதபடிக்கு அவர்களை மீட்டுக் கொள்கிறார். தேவனுடைய வல்லமைக்கு எல்லாம் கூடும் என்பதால் எல்லாரையும் இரட்சிக்கிறார். தேவ ஆளுகைக்கு குறை ஏற்படாவண்ணம் அவர் அப்படிச் செய்கிறார்.

தேவன் தம் இரட்சிப்பின் செய்கையில் பட்சபாதம் காட்டுவதில்லை. பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படியாமல், வழி தப்பித்திரிந்த தமது ஜனங்கள் எல்லாரையுமே அவர் இரட்சிக்கிறார். பூமியில் தேவன் தமது மகிமைக்காக, தமது அன்பினால், இரட்சிக்கும் பணியைச் செய்கிறார். ஆகவே, ஆத்துமாவே இயேசு இரட்சகர் என்று அழை. இயேசு சகலரையும் இரட்சிக்கக்கூடியவர் என்று கூறு. இரட்சிப்பதே அவருடைய முக்கிய வேலை, இதுவே அவருக்கு மகிழ்ச்சி. அவர் ஒருவரே இரட்சகர். அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ளவர். நரகத்தின் எதிர்ப்பையும் அவர் பொருட்படுத்தாது இரட்சிக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார். அப்பணியில் அவர் தொடர்ந்து செயல்ப்படுகிறார். நமக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் அளிக்க இப்போது தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

அவரை நம்பி நீ இருந்தால்,
உன் பாவம் நீங்கிப்போகும்.
அதுவே இகத்தில் மோட்சம்,
அதுவே இன்ப வாழ்வாம்.