முகப்பு தினதியானம் டிசம்பர் கிறிஸ்துவினுடைய அடிமை

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19

“கிறிஸ்துவினுடைய அடிமை” 1.கொரி.7:22

கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத எவனும் தான் ஆண்டவருக்கு அடிமையென்று சொல்லக்கூடாது. ஓவ்வொரு கிறிஸ்தவனும் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதால் கிறிஸ்துவின் அடிமைதான். அவன் தனக்கு இருக்கும் தாலந்துகளை ஆண்டவருக்கென்று பயன்படுத்தவேண்டும்.

இந்த இரவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்வென்றால், „நான் கிறிஸ்துவினுடைய அடிமையா? அவர் எனக்கு எஜமானா? எப்பொழுதும் நான் அவரை அவ்வாறு ஏற்றிருக்கிறேனா? என்னைத் தேவன் பார்க்கிறார் என்று நினைத்து, தெயவ்பயத்துடன் நடக்கிறேனா? நான் செய்கிறது எதுவானாலும், இது என் எஜமானுடைய சித்தமா? அவருக்குப் பிரியமானதா? நான் அவருடைய பணியாள். அவருடைய கட்டளைகளுக்கேற்ப யாவற்றையும் செய்கிறேனா? என்பதே.

பரிசுத்த ஆவியானவர் தினமும் „நீ கிறிஸ்துவின் அடிமை. அவர் உனக்கு ஞானமும் புத்தியும் தயாள குணமுமுள்ள எஜமான்“ என்று சொல்லுகிறார். இதை நீ கேட்கிறாயா? அவருக்குப் பிரியமாக நடப்பதே எனது வேலை. உலகம் எனக்கு வேண்டாம். சாத்தானுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை“ என்று நீ சொல்லக்கூடுமா? அவருடைய அடிமையாக அவருடைய வார்த்தையைக்கேள். அவருடைய கிருபையைத் தேடு.

உம்மைக் கர்த்தர் என்பேன்,
உள்ளத்தாலும் நேசிப்பேன்.
உம் சித்தமே செய்வேன்
உம்மிலேயே இளைப்பாறுவேன்.