மார்ச் 28
“நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்.” சங். 23:4
நான் கர்த்தருடையவனானால் ஏன் பயப்பட வேண்டும்? கர்த்தருக்கம் பயந்து நடந்தால் எதற்கும் பயப்பட தேவையில்லை. கர்த்தர் உன்னை எல்லா தீமைக்கும் விலக்கிக் காப்பார். ஒரு சோதனையும் வராமல் காப்பாரென்றல்ல. சோதனைகள் தீமையல்ல. நன்மைகள்தான். தீமையானவைகள் இரண்டுதான். ஒன்று பாவம், மற்றொன்று பின்மாற்றம். விசுவாசிகளுக்கு பாவம் மன்னிக்கப்பட்டு போயிற்று. அவர்கள் கிறிஸ்துவுடன் சிலுவையிலறைப்பட்டவர்கள். விசுவாசியின்மேல் அது ஆளுகை செய்வதில்லை. பின்மாற்றத்திற்கு விசுவாசிகள் வாழ்க்கையில் இடமில்லை. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது.
நமக்குள் இருந்து நம்மை நமத்த வேண்டியது பயமல்ல. அன்பே! திகிலல்ல, நம்பிக்கையே! கர்த்தர் நம்மைக் காக்கிறவர். அவர் நம்முடைய ஆத்துமாவைக் காக்கிறவர். நமக்கு கஷ்டங்களும், துன்பங்களும், பிசாசாலும், மனிதனாலும் வரலாம். வறுமையும் வியாதியும் நண்டாகலாம். மரணமும் நமக்குத்தீமை அல்ல. அதற்கும் நாம் பயப்பட தேவையில்லை. கிறிஸ்துவைப்பற்றி அவருக்காக அவரைப்போல நடப்போமாக. அப்போது மரிக்கும்போது கிறிஸ்துவுடன் இருப்போம். இங்கிருப்பதைவிட அங்கிருப்பதே நல்லது. சாவு நமக்கு ஆதாயமாகும். ஆகவே வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிப்பிடித்து, இரத்தம் சிந்திய கிறிஸ்துவின் அருகே நடந்து, தேவனை மகிமைப்படுத்திய உயிரோடிருக்கும் நாளெல்லாம் பொல்லாப்புக்குப் பயப்படேன் என்று சொல்லுவோமாக.
கலங்காதே திகையாதே
இயேசுவுக்கு நீ சொந்தம்
உன்னை மோட்சத்தில்
சேர்ப்பதே அவர் ஆனந்தம்.