முகப்பு தினதியானம் செப்டம்பர் அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.