முகப்பு தினதியானம் ஜனவரி எல்லாம் உங்களுடையதே

எல்லாம் உங்களுடையதே

ஜனவரி 4

“எல்லாம் உங்களுடையதே”  1.கொரி. 3:21

என் பிரிய சகோதரரே, கேளுங்கள். ‘தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?” இது என்ன விசித்திரம்! ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடைய உபயோகத்துக்கும் நம்முடைய பிரயோஜனத்துக்கென்றிருக்கிறது. நமது கரங்களில் அது இல்லாவிட்டாலும் இன்னும் அவைகள் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இவைகளை விசுவாசத்தினால் அறிந்து அனுபவிக்கவும், நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு வாக்குத்ததத்ங்களில் கொடுக்கப்பட்டுமிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தத வேளையில் நமக்குக் கொடுக்கப்படும். கிறிஸ்துவானவர் இரண்டாந்தரம் பாவமன்றி இரட்சிப்பளிக்கவரும்போது சகலம் நமக்குக் கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர். இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், பரமகாரியங்களைப் பார்த்தாலும், இனிவரும் காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், பூமிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும், சகலமும் நம்முடையதென்றே திட்டமாய்ச் சொல்லலாம்.

தேவன் நம்முடைய பங்கு, இயேசு நம்முடைய மணவாளன், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன், பூமி நம்முடைய நித்திய வீடு. நாம் இதை விசுவாசிக்கிறோமா? இவைகள் எல்லாம் உண்மையென்று எண்ணி வாழ்ந்து வருகிறோமா? சகலமும் என்னுடையதென்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ? அப்படியானால் ‘நான் உன் தரித்திரத்தை அறிவேன். ஆனாலும், நீ ஐசுவரியவான்” என்று அவர் நம்மைப் பார்த்துத் திட்டமாய்ச் சொல்லலாம்.

உலகப் பொருள் போகினும்
அவர் உன் பங்காமே
ஒன்றுமற்றவனாயினும்
அவர் உன் சொந்தமாமே.