முகப்பு தினதியானம் டிசம்பர் விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ

விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ

டிசம்பர் 12

“விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ” (ஏசா.50:2)

இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்தமும் வேண்டாம். எந்தக் கலக்கமும் வேண்டாம். உன்னை மனமடிவாக்கிய உன் துன்பத்தை நன்றாக கவனி. ஆண்டவர் எந்தக் கோணத்திலிருந்து வரும் உன் துன்பங்களைச் சந்திப்பார். பிறகு விடுவிப்பதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ என்று கர்த்தர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். பாவத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும், பிசாசின் வல்லமையிலிருந்தும், தண்டனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே, தேவனுடைய காரியத்தில் வரும் எப்பிரச்சனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே.

உன் தேவனால் உன்னை விடுவிக்க முடியாதா? உன்னை இரட்சிக்கக் கூடாதபடி அவருடைய கரங்கள் குறுகிப்போகவில்லை. உன் விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுக்க முடியாதபடி அவருடைய செவிகள் மந்தமாகிப்போகவில்லை. இல்லையென்றால் ஏன் சந்தேகப்படுகிறாய். தேவனிடத்தில் நம்பிக்கை வை. இதற்கு முன்னே அவர் உனக்குச் செய்தவைகளையெல்லாம் எண்ணிப் பார். உன்னைக் காத்தார், மீட்டார், நடத்தினார், ஆசீர்வதித்தார். இவைகளுக்காக அவரைப் போற்று, அவரைத் துதி. இனிமேலும் அவர் உன்னை நடத்துவார். அதை நம்பு. உன் அவிசுவாசத்தை விலக்கு. அவரை நோக்கிக் கூப்பிடு. அவருடைய வல்லமை உன்னை நிரப்பட்டும். என்னை நோக்கிகக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

விடுவிக்கிறவர் வல்லவர்,
ஞானம் ஆற்றல் உள்ளவர்,
நித்தியத்தின் மீது அதிகாரம்
உள்ளவர், அவரைப் பற்று, பெலன் கொள்.