ஜனவரி 18
“கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10
தெளிவான கடமைகளைக் குறித்து நமக்குப் புத்தி சொல்வது அவசியந்தான். ஏனென்றால் சில வேளைகளில் நாம் அவைகளை மறந்துபோகிறோம். அடிக்கடி கவலையுற்று வெதுவெதுப்பான சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையானால் அவரின் ஜனங்ளை நேசிப்போம். அவருடைய நியமங்களையும் அவருடைய சுவிசேஷத்தையும் நியாயப்பிரமாணத்தையும் நேசிப்போம். நமக்குச் சேதமுண்டாக்குகிறதைத்தான் அவர் விலக்குகிறார் என அறிந்து, அவரின் வாக்குத்தத்தங்களையும் நேசிக்கிற அளவிலேயே அவர் வேண்டாமென்று விலக்குகிறதையும் நேசிப்போம். இந்த நாளில் தாவீதைப்போல் ‘நான் உம்முடைய பிரமாணத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன். நாளெல்லாம் அது என் தியானம்’ என்று நாம் சொல்ல முடியுமா?
தேவபிரமாணம் தீமையான யாவையும் விலக்குகிறது. ஆகவே நாம் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பாவத்தையும், தீமையையும் அவர் வெறுக்கிற விதமாகவே வெறுத்து விலக்குவோமாக. தீயநினைவுகளை எதிர்த்துப் போராடுவோமாக. கெட்ட வார்த்தைகளை விலக்கி கடிவாளத்தினால் வாயை காப்போமாக. கெட்ட செய்கையை விலக்கி பொல்லாப்பாய் தோன்றுகிறதைவிட்டு விலகுவோமாக. இருதயம் பொல்லாங்குள்ளதும் அதிக கேடானதுமானது. எல்லா பொல்லாங்குகளும் அதிலிருந்து வருகிறது. முக்கியமாய் தேவனை விட்டு விலகுகிற அவிசுவாசமுள்ள இருதயத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருப்போமாக.
நண்பரே! தீமையைப் பகைக்க உனக்கு மனதிருக்கிறதா? அப்படியானால் தேவனோடு நெருங்கி பழகு. அப்போது பரிசுத்த வாழ்வு உனக்குச் சுலபமாகிவிடும். அப்போது எந்தப் பொல்லாப்பையும் வெறுத்துத் தள்ளுவாய். கர்த்தரின் தாசர்களே, பொல்லாப்புக்கு முழு மனதோடு பயப்படுங்கள். யாவரோடும் சமாதானமும் பரிசுத்தமாயுமிருங்க நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே.
நேச பிதாவே உம்மில்
எனக்கு எல்லாம் சொந்தம்
என்னையும் தந்தேன் உமக்கு
இதுவே எனக்கானந்தம்.