யூன் 24
“கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்.” சங். 61:2
இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கன்மலை கிறிஸ்துதான். முன்பு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிறகு முன்னடையாளங்களால் முத்தரிக்கப்பட்டு பிரசன்னமானவர் இவரே. தாகம் தீர்ப்பதற்காகவே அடிக்கப்பட்ட கன்மலை இவர். களைத்துப்போனவர்களுக்கு இளைப்பை அருளும் கன்மலை இவர். துன்பப்படுகிறவர்களை ஆதரிக்கும் கன்மலை இவர். பயந்து கலங்கினவர்கள் ஒதுங்கி நிற்கும் பிளவுண்ட கன்மலை இவர். இந்த கன்மலையின்மேல் நாம் சுகமாய்த் தங்கலாம். இந்தக் கன்மலையின்மேல் நின்று தூரத்திலுள்ள சியோனைப் பார்க்கலாம். இந்தக் கன்மலையில் இருந்தால் பூயலுக்கு பாதுகாக்கப்படலாம். சூரிய வெப்பத்துக்கு நிழலாய் தங்கலாம். ஆனால் நாமோ, இதன் அருமையை தெரிந்துக்கொள்ளாமல் அலைந்து திரிகிறோம். தூரத்தில் இருக்கும்போது இதன் பயனை உணர்ந்து இதனால் கிடைக்கும் சிலாக்கியத்துக்காக பெருமூச்சு விடுகிறோம்.
நாம் எங்கே இருந்தாலும் இந்தக் கன்மலையிடம் வரலாம். நம்மை நடத்த உள்ள துணையும் உதவி செய்யும் சிநேகிதனும் நமக்குத் தேவை. ஆகவே நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சங்கீதக்காரனைப்போல் என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என்று சொல்லுவோமாக. இயேசுவானவர் நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார். நமக்கு வேண்டியதெல்லாம் அவரிடம் உண்டு. எப்பொழுதும் ஜெபம் பண்ணலாம். தேவன் ஜெபத்தை ஏற்று தைரியப்படுத்தி, பதில் அளிக்கிறார். அவரிடத்தில் போவோமானால் பயங்களை வென்று சத்துருக்களை ஜெயித்து, நாம் எதிர்பார்க்கிறதிலும், அதிகம் பெறுவோம். நாம் கேட்கிறதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக அவர் செய்ய வல்லவர்.
சேர்ந்துப்போகும் தருணம்
இயேசுவினிடம் செல்லுவோம்
எந்தத் துன்பம் வந்தாலும்
கன்மலையை விடோம்.