ஜனவரி 07
“அவனைக் கனப்படுத்துவேன்” சங். 91:15
என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து தன் கண்களையும் மனதையும் இரட்சகர்மேல் உறுதியாய் வைப்பானானால் கர்த்தர் அவனைக் கனப்படுத்துவார். அப்பொழுது அவன் வருத்தங்களை பொறுமையோடு சகித்து மற்றவர்கள் சொல்லும் நிந்தைகளையும் பழிச்சொற்களையும் நிராகரித்து துன்பநாளிலும்கூட பிதாவின் முகமலர்ச்சியை அனுபவிப்பான். கர்த்தரோ அவனைச் சந்தித்து அவனுடன் இனிமையாய்ப் பேசி அவனைச் சூழ்ந்திருக்கும் சகல துன்பங்களையும் மறந்துவிடும்படி செய்து அவன் வாழ்க்கையின்மேல் நோக்கமாயிருப்பார். வியாதியில் ஆற்றித்தேற்றி சுகத்தில் அவனை நடத்திக்கொண்டு போவார். வறுமையில் திருப்தியைக் கொடுத்து வாழ்வில் அவனுக்கு உதாரகுணத்தைத் தருவார். வாழ்நாளில் அவனுக்கு வேண்டியதைத் தந்து அவனை ஆதரித்து மரணத்தில் உயிர்ப்பித்து தம்மண்டையில் ஏற்றுக்கொள்வார். உயிரோடிருக்கும்போது ஆசீர்வாதமாயிருந்து மரித்த பிறகு சிங்காசனத்துக்கு அருகில் வைக்கப்படுவான்.
அன்பானவர்களே! உங்களை வெறுத்து மாம்சத்தை வென்று உலகத்துக்கு மேலாக எழும்பி விசுவாசத்தினால் வாழ்ந்து தேவனுடன் சஞ்சரித்துக் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். அவரும் உங்களைக் கனப்படுத்துவார். உங்களின் கவலைக்குரிய காரியங்களை அவருக்கு ஒப்புவித்துப் பாருங்கள். அவருடைய இராஜ்யத்தையும் மகிமையையும் விரிவடையச் செய்யப் பாருங்கள். அப்போது தேவன் உங்களை ஆசீர்வதித்து மன்னாவால் உங்களைத் திருப்தியாக்குவார் என்று அறிவீர்கள்.
என் நிமித்தம் இம்மையில்
தன்னை வெறுப்பவன்
எனதன்பை ருசித்து
என் மகிமையை காண்பான்.