முகப்பு தினதியானம் நீதிபரன்

நீதிபரன்

நவம்பர் 13

“நீதிபரன்” அப். 7:52

நமதாண்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.

தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொடுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.

நீதிபரர், என் ஆண்டவர்
தம் நீதியால் என்னை நித்தம்
தாங்குவார், அருள்தனை அளித்து
ஆனந்தம் தருவார் பரத்தில்.