ஜனவரி 08
“இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” 1.சாமு. 7:12
தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில் தண்ணீரைக் கடந்து அக்கினியில் நடந்தாலும், பாதைகள் கரடு முரமானாலும், பாவங்கள் பெருகி, சத்துருக்கள் அநேகரானாலும் நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளதாயிருந்தாலும், கர்த்தர் நமக்கு ஏற்ற துணையாய் நின்றார். இருட்டிலும் வெளிச்சத்திலும், கோடைக்காலத்திலும் மாரிக்காலத்திலும், ஆத்தும நலத்திலும் சரீர சுகத்திலும் அவர் நமக்கு உதவி செய்தார்.
இந்த நாளில் அவருடைய இரக்கங்களை நினைத்து நம்முடைய ‘எபெனேசரை” நம் முன் நிறுத்தி அவரே நமக்கு உதவினாரென்று சாட்சியிடுவோமாக. மேலும் கடந்த காலத்தை நினைத்து கலங்காமல், எதிர்காலத்திலும் தேவனே உதவிடுவார் என தைரியமாய் நம்புவோமாக. ‘நான் உனக்குச் சொன்னதை எல்லாம் செய்து தீருமட்டும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறார். நாமும் சந்தோஷித்து மகிழ்ந்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தடைய நாமத்திலே எங்களுக்கு ஒத்தாசை உண்டென்று சங்கீதக்காரனோடு துதிபாடுவோமாக. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறதுபோல நாமும் தைரியத்தோடு கர்த்தர் எனக்குச் சகாயர், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்வோமாக. எது மாறிப்போனாலும் உன் தேவனுடைய அன்பு மாறாது. அவரே மாற்ற ஒருவராலும் கூடாது. ஆகையாய் அவரை நம்பு. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்.
இம்மட்டும் தேவன் காத்தார்
இம்மட்டும் நடத்தினார்
இன்னும் தயை காட்டுவார்
அவர் அன்பர்கள் போற்றிப் பாடுவர்.