முகப்பு தினதியானம் டிசம்பர் எல்லாம் புதிதாயின

எல்லாம் புதிதாயின

டிசம்பர் 20

“எல்லாம் புதிதாயின” 2.கொரி.5:17

புதிதாய் இயேசுநாதரை ஏற்றுக்கொண்டவன் „எல்லாம் புதிதாயின“ என்றுதான் நினைப்பான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது எல்லாருமே புதியவைகளைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள்ளே ஜீவன் இருக்கிறது. அது ஆவிக்குரிய ஜீவன். வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை அவர்கள் புசிக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் புதிதானவை. பரிசுத்தமான நடக்கையைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். புது வாழ்க்கையைத் தெரிந்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பினால் அவர்கள் நெருக்கப்படுகிறார்கள். புதிய நோக்கங்களை அவர்கள் பெறுகிறார்கள். தேவமகிமையைக் கண்டு அதில் வளருகிறார்கள். புதிய புதியதான நண்பர்களோடு ஐக்கியம் கொள்ளுகிறார்கள். காரணம் என்வென்றால், எல்லாம் புதிதாயின“.

அப்படிப்பட்டவர்களுக்கு தலையாயிருப்பவர் கிறிஸ்து. இரண்டாம் ஆதாம் அவரே. அவர்தாமே இவர்களைத் தேவனோடு ஒப்புரவாக்கிப் புதிய பரதீசிக்குள் அழைத்துச் செல்கிறார். இவர்கள் எல்லாரும் புது உடன்படிக்கையின்கீழ் இருக்கிறார்கள். இது கிருபையின் உடன்படிக்கை கிரியையின் உடன்படிக்கையல்ல. தேவனே இவர்களுக்குப் பிதா, தேவதூதர்கள் பணிவிடையாள்கள். கிறிஸ்து இவர்களுக்கு மூத்த சகோதரர். தூய ஆவியானவர் இவர்களுக்குத் தேற்றரவாளர். தேவனுடன் இவர்களுக்கு உண்டாயிருக்கும் உறவு புதியது. இவர்கள் உலகத்துக்குச் சாட்சிகளாய் இருப்பவர்கள். கிறிஸ்துவின் ஊழியர்கள். இவர்கள் ஆவியானவர் தங்கும் ஆலயம். இவர்களுடைய ஆசைகள், நம்பிக்கை, நோக்கம் எல்லாம் புதியவைகள். புதிய வானம் புதிய பூமியின் சிருஷ்டிகள் இவர்கள். பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின.

நான் உம்முடையவன், மற்றும்
நான் உம்மால் புதிதாக்கப்பட்டேன்.
புது வானம் பூமியின் புது சிருஷ்டி
புதுப் பரதீசின் புதுக் குடிமகனே.