பெப்ரவரி 09
“நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்.” சங். 109:4
விழிப்பும் விண்ணப்பமும் எப்போதும் இணைபிரியாதிருக்க வேண்டும். ஜெபிக்கிற கிறிஸ்தவன் விழிக்க வேண்டும் விழிக்கிற கிறிஸ்தவன் ஜெபிக்கவேண்டும். ஒன்று மற்றொன்றுக்குத் துணை. நம்முடைய வேலைகளைப் பார்க்கும்போதும் தினசரி அலுவல்களைக் கவனிக்கும்போதும் ஜெபம் மிகவும் அவசியம். அது எண்ணற்ற தீமைகளுக்கு நம்மைக் காத்து மேலான நன்மைகளை நமக்கு கொண்டு வருகிறது. ஜெபத்திற்குச் செவிகொடுப்பதே தேவனுக்குப் பிரியம். உத்தமருடைய விண்ணப்பம் அவருக்குப் பிரியம். அவரை நோக்கி மன்றாடுவது அவருக்குச் சந்தோஷம் என்று எண்ணத்தோடு அவர் சமுகம் போவோமாக.
ஒரு தகப்பனைப்போல் அவர் என்னைக் கண்ணோக்குகிறார். தகப்பனைப்போல் செவி கொடுக்கிறார். அவர் சிம்மாசனத்தண்டை நான் சேராமல் என்னுடைய விண்ணப்பங்களை ஆத்திரத்தோடு செய்து முடிக்கும்போது அவர் விசனப்படுகிறார். தைரியமாய் வா என்று அவர் அழைக்கிறார். அவர் கூப்பிடுதலைக் கவனியாதேப்போனால் ஏதாவது ஓரு துன்பத்தை அனுப்புவார். ஒரு பூசலைக் கட்டளையிடுவார். நம்மை அவர் சிம்மாசனத்தண்டை துரத்த ஒர சத்துருவை எழுப்பி விடுவார். நமது துயரங்கள் நம்மைப் பார்த்துத் தெளிவாய்ச் சொல்கிறதை நாம் கவனிப்போமானால் அவைகள், ‘முழங்கால் படியிடு. உன் ஜெப அறைக்குப்போ அறைக்குப் போ, உன் தேவனை நோக்கிக் கூப்பிடு’ என்று கூறும் சத்தங்கள் கட்டாயம் கேட்கும்.
இடைவிடாமல் ஜெபம்பண்ண
தாரும் வரம் தேவனே
நான் உம்மோடே நடக்க
உமதாவி அருளுமே.