முகப்பு தினதியானம் தேவன் என்னென்ன செய்தார்

தேவன் என்னென்ன செய்தார்

நவம்பர் 05

“தேவன் என்னென்ன செய்தார்” எண். 23:23

தேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.

தமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.

தேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார்? அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார்? பாவிகளான நமக்காகத்தான். ஏன்? தமது நாம மகிமைக்காகவே.

பிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.

தேவன் இம்மட்டும் செய்தது
இனி செய்வதற்கும் ஆதாரம்
விசுவாசக் குறைவின்றியே நாம்
அவரில் தைரியமாயிருப்போம்.