முகப்பு தினதியானம் ஏப்ரல் கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது

கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது

ஏப்ரல் 17

“கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” 2.கொரி. 5:14

நேசிக்கிறவர்களுடைய குணத்துக்கும் தன்மைக்கும் தக்கபடியே அவர்களின் நேசமும் இருக்கும். இயேசு கிறிஸ்து நிறைவுள்ளவரானபடியால் மேலான குணங்கள் எல்லாம் அவரிடத்தில் இருந்தது. அவருடைய அன்பு அதிசயமானது, மகிமையானது. அதில் பாவிகளுக்காக உருகும் உருக்கமும் நீதிமான்களுக்கா மகிழும் மகிழ்ச்சியும் இருக்கிறது. பிதா அவரை நேசிக்கிறதுபோலவே நம்மை அவர் நேசிக்கிறார். பிதா அவர்மேல் வைக்கும் அன்பு எவ்வளவு அதிகமென்று நமக்குத் தெரியாததுப்போலவே அவர் நம்மேல் வைக்கும் அன்பின் அளவு தெரிந்துக்கொள்ள முடியாது.

அன்பு அவர் இருதயத்தில் வாசம்பண்ணி அவர் கண்களில் விளங்கி, தமது கைகளினால் கிரியை செய்து, அவர் நாவில் பேசி அவரால் சகலத்தையும் சம்பாதிக்கிறது. இயேசு எந்த நிலைமையும் தாழ்வாக எண்ணவில்லை. எந்தச் செயலையும் கேவலமாய் நினைக்கவில்லை. எந்தக் குறைவையும் பார்த்துவிட்டுப் போகவில்லை. எந்த ஈவையும் பெரியதாக எண்ணவில்லை. எந்தத் துன்பத்தையும் சகிக்கக் கூடாதென்று சொல்லவில்லை. தமது ஜனத்தின் மத்தியில் கண்ட எந்த நன்மையையும் அற்பமாய் எண்ணவில்லை. அவர்களுக்கு நன்மை செய்ய எந்தப் பேதமும் பார்க்கவில்லை. கிறிஸ்துவின் அன்பு, சொல்லுக்கும் நினைவுக்கும் அடங்காதது. இந்த அன்பால் ஏவப்பட்டு நான் அப்போஸ்தலர்கள் உழைத்தார்கள். துன்பத்தைச் சகித்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து சகலத்தையும் வீணென்று தள்ளுவோம். அவருக்காக எதையும் சகிக்க, உழைக்க, மரிக்க கொடுக்க அவரின் அன்பே நன்மை ஏவிவிடுகிறது. கிறிஸ்துவின் அன்பு ஜாக்கிரதைக்கும், வைராக்கியத்துக்கும், உதாரகுணத்துக்கும் உன்னை ஏவி விடுகிறதா?

பாவம் விட்டொழிக்க
கிறிஸ்துவின் அன்பு ஏவுது
அவருக்கு என்னை ஒப்புவிக்க
அது என்னை நெருக்குது.