ஏப்ரல் 18
“என் கனம் எங்கே” மல்கியா 1:6
கர்த்தர் தமது மக்கள் தம்மை மகிமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நாமும் இந்த முக்கியமான கடமையை மறந்திருக்கிறோம். மத்தேயுவைப்போல விசுவாசத்திலும் கிரியைகளிலும், பேதுருவைப்போல உண்மையிலும், உற்சாகத்திலும், யோவானைப்போல மிகுந்த அன்பிலும், பவுலைப்போல இரத்த சாட்சியிலும், உருக்க பாரத்திலும் அவரைக் கனப்படுத்த வேண்டும்.
அன்பர்களே, தேவனைக் கனப்படுத்துவது உங்களுக்கு பிரியமா? அப்படியானால் அவர் செயலை நம்புங்கள். அவர் எப்போதும் உங்களைப் பார்க்கிறாரென்று நினைத்து நடவுங்கள். எல்லாரையும்விட அவர் ஜனத்தை அதிகம் நேசியுங்கள். அவர் ஊழியம் சிறந்து நடக்க எது வேண்டுமானாலும் செய்து உதவுங்கள். தேவனுக்காய் காரியங்களைச் செய்யாவிட்டால் அவர் உங்களைப் பார்த்து என் கனம் எங்கேயென்று நன்றாகக் கேட்கலாம். தேவன் விரும்புகிறபடி அவரைக் கனப்படுத்த வேண்டுமானால் அவரின் தன்மைகளை அறிய வேண்டும். இயேசுவின்மூலம் நல்ல ஐக்கியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அவர் சமுகம் முன் நிற்கிறதாக எண்ணவேண்டும். அவர் அதிகாரத்துக்குக் கீழ் அடங்க வேண்டும். அவரின் நேசத்தின் ஆழத்தை ருசித்து, அவரின் சித்தம் செய்ய வேண்டும். அவர் விரும்புகிறதைப் பார்த்து அதன் மேல் நோக்கமாயிருக்க வேண்டும். நீங்கள் அவரைக் கனப்படுத்தினால், உங்களுக்கு நல்ல சமாதானம் தந்து வேண்டிய யாவையும் கொடுத்து, எந்தத் துன்ப வேளையிலும், சகாயத்தையும் தந்து, அன்பாய் உங்களை அடிக்கடி சந்தித்து, எந்தச் சத்துருவையும் கடைசியிலே வெற்றி சிறக்க சத்துவத்தையும், கொடுத்து உங்களைக் கனப்படுத்துவார்.
தேவன் எனக்குப் பிதாவா?
நான் அவரின் பிள்ளையா?
அவரைக் கனப்படுத்தி
அவர் சித்தம் நடப்பேன்.