செப்டம்பர் 16
“மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” மல். 3:8
இந்த கேள்வி மிகக் கேவலமானது. மனிதன் தேவனை வஞ்சிப்பதென்பது எத்தனை துணிகரமான செயல்! நாம் தேவனை எவ்வாறு வஞ்சிக்கிறோம். அவருக்குச் சொந்தமானவைகளை நாம் எடுத்துக்கொள்ளாமற்போனாலும், நாம் அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்தாமலிருந்து அவரை வஞ்சிக்கிறோம். ஆதலால், அவர் நம்மைப் பார்த்து, நீங்கள் என்னை வஞ்சித்தீர்கள் என்கிறார். அவருடையவைகள் யாவற்றிலும் நாம் அவரை வஞ்சிக்கிறோம். அவருக்காகச் செலவிட வேண்டிய அவருடைய நேரத்தை எடுத்துக்கொண்டோம். அவருடைய பொருளைத் திருடிக்கொண்டோம். பிறருக்குக் கொடுக்க வேண்டியவைகளை நமக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டோம். அவருடைய ஊழியத்தை நாம் செய்வதில்லை.
நம் இருதயம் அவருக்குச் சொந்தம். நாம் அதைக் கொடுக்கவில்லை. மாறாகச் சிலுவைகளுக்குக் கொடுத்தோம். உலகத்தையே அதிகம் நாடி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நேசித்தோம். அவர் தந்த திறமைகளை அவருக்கென நாம் பயன்படுத்தவில்லை. அவருடைய பணிகளை விட்டு நமது பணிகளையே செய்தோம். இப்படி நடப்பது பாவம். அவரை வஞ்சிப்பது கொடுஞ்செயல். நம்மால் அவருடைய கோபத்திற்குமுன் இமைப்பொழுதுகூட நிற்கமுடியாது.
பிரியமானவர்களே, தேவனை நாம் வஞ்சித்துக்கொண்டிருக்கிறோமா? இவ்வாறானால் உடனே நமது குற்றத்தை அறிக்கை செய்துவிட்டு விடுவோம். நமது மீறுதல்களை உணர்ந்து நம்மை திருத்திக்கொள்வோம். முதலாவது தேவனுக்குரியவைகளை அவருக்குச் செலுத்துவோம். நமது உள்ளத்தில் உண்மையும், நடக்கையில் உத்தமமும் இருந்தால் எத்தனை நலமாயிருக்கும்.
நான் உம்மை வஞ்சித்தேன்
நாதா என்னை மன்னியும்
கிறிஸ்துவின் இரத்தம் மீட்டதால்,
என்னைக் கடாட்சித்தருளும்.