முகப்பு தினதியானம் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

யூன் 17

“தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.” லூக்கா 17:21

தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில், தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நமக்குள் வாசம் செய்து அரசாளுகிறார். மறு பிறப்பில் அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மை முற்றும்முடிய அவரின் ஊழிய மகிமைக்கும், புகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்குள் அரசாளுகிறார். அவர் இப்படி அரசாளுகிறதினால், தேவனோடு ஒப்புரவாகுதலும், தேவனாடு நேசமாகுதலும், தேவசித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அவரின் கிரியைகளினாலும், தயவினாலும், ஆவியானவரின் தேற்றுதலினாலும் உண்டாகிறது. கர்த்தர் ஆளுகைச் செய்யும் இடத்தில், ஆத்துமா குற்றம் நீங்கி, தேவ சமாதானத்தை அனுபவித்து, பிதாவின் மகிமையை உணர்ந்து ஆனந்தங்கொள்ளுகிறது. ஒருவன் ஆண்டவரின் ஆளுகைக்குள் வரும்போது இருதயத்தில் பகை கொல்லப்பட்டு மனதில் இருள் நீங்க மாய்மாலம் நீங்கி, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற சிந்தைப் பிறக்கிறது. தேவ சித்தமே அவனுக்குப் பிரமாணம். கிறிஸ்து முடித்த கிரியை அவனுக்கு அருமை. தேவ மகிமை அவன் நாடும் மகிமை. அவன் விரோதி அவனுக்கு சிநேகிதனாகிறான். இராஜதுரோகி உத்தம குடிமகனாகிறான். அந்நியன் அருமையான பிள்ளையாகிறான். தேவ இராஜ்யம் நமக்குள் இருந்தால், தேவ வாக்குகளைப் பிடித்தவர்களாய் தேவனுக்கு பிரியமாய் நடக்கப் பார்க்க வேண்டும்.

கர்த்தாவே என்னை ஆளும்,
என் பாவம் கழுவும்,
சமாதானத்தை அளியும்,
தேவ மகிழ்ச்சியாய் நிரப்பும்.